Sep
12
2012

Vinayagar Tamil Slokas

பிள்ளையார் ஸ்லோகங்கள்

சின்னப் பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் பிடித்தமானவர் பிள்ளையார். அவரை வணங்கினால் போதும், எந்தச் செயலிலும் வெற்றி நிச்சயம்.

மஞ்சளால் பிடித்துவைக்கும் பிள்ளையாரை, மனத்தால் பிடித்துவைக்க உதவுவன, அவர் மீது பாடும் ஸ்லோகங்கள். எண்ணியவை ஈடேறவும், எந்தச் செயலிலும் வென்றிடவும், சொல்வதற்கு எளிமையான ஸ்லோகங்கள் இவை.

ஔவை, சம்பந்தர், சேக்கிழார் எனப் பலரும் பாடிய இந்த ஸ்லோகங்கள் மனதார சொல்லுங்கள்; வாழ்வில் அனைத்திலும் வெல்லுங்கள்.

vinayagar slokas

Vinayagar Slokas

முதல் வணக்கம்

ஓமெனும் பொருளாய் உள்ளோய் போற்றி!
பூமனும் பொருள்தோறும் பொலிவாய் போற்றி!
அகரம் முதலென ஆனாய் போற்றி!
அகர உகர ஆதி போற்றி!
- பிள்ளையார் வழிபாடு

சீரும் செல்வமும் பெற

செல்வம் அருள்க தேவா போற்றி
நல்லன எமக்கருள் நாயக போற்றி
ஆக்கமும் ஊக்கமும் அருள்வாய் போற்றி
காக்க எங்களை உன்கழிலிணை  போற்றியே!
-  விநாயகர் போற்றி

எல்லா நலனும் பெற

கற்பகமே தேனுவே காமரு சிந்தாமணியே
அற்பகமார்  ஐங்கையுடை ஆரமுதே – சிற்பமுறு
தந்த வளமுகத்துத் தற்பரனே சாலவும்
உவந்தாள நாஎன்முன் வா.
-  உ.வே.சா.

வளங்கள் அனைத்தும் பெற

திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்
கருணை பூக்கவும் தீமையைப் போக்கவும்
பருவமாய் நமதுள்ளம் பழுக்கவும்
பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம்.
-  விருத்தாசல புராணம்

அறிவும் ஆற்றலும் பெற

சித்திதரும் புத்திதரும் செந்திருவைச் சேர்விக்கும்
பக்திதரும் மெய்ஞ்ஞானம் பாளிக்குங் – கொத்தி
அறிமுகனைக் காய்ந்த வருணேசர் தந்த
கரிமுகனைக் கைதொழுதக்கால்
-  அருணகிரியந்தாதி

வித்தைகள் கற்றிட

அத்தி முகத்தோனே அரனார் திருமகனே
சத்தியின்  புத்திரனே சரிந்த வயிற்றோனே
முதி அளிக்கின்ற முருகற்கு மூத்தோனே
வித்தை எனக் கருளும் வேலவர்க்கு மூத்தோனே!
- புலந்திரன் தூது.

கல்வியறிவு பெற

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் – கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றுந்தா.
- ஔவையார்

எழுத்தறிவு பெற்றிட

எடுக்குமாக்கதை இன்தமிழ்ச் செய்யுளாய்
நடக்குமேன்மை நமக்கருள் செய்திடத்
தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீண்முடிக்
கடக்களிற்றினைக் கருத்துள் இருத்துவாம்.
- சேக்கிழார்

மனம் ஒருமைப்பட

யானை முகத்தான் பொரு விடையான் செயகழார்
மான மணிவண்ணன் மாமருகன் – மேல்நிகழும்
வெள்ளக் குமிழி மத்தது விநாயகன் என்
உள்ளக் கருத்தின் உளன்.
-  கபிலதேவ நாயனார்

சஞ்சலங்கள் நீங்க

பக்தியுடையார் காரியத்திற்
பதறார் மிகுந்த பொறுமையுடன்
வித்து முளைக்குந் தன்மை போல்
மெல்லச் செய்து பயனடைவார்
சக்தி தொழிலே அனைத்து மெனிற்
சார்ந்த நமக்குச் சஞ்சல மேன்?
வித்தைக் கிறைவா கணநாதா
மென்மைத் தொழிலிற் பணியெனையே!
-  சுப்பிரமணிய பாரதி

சிந்தை தெளிவுபெற

குவலயம் போற்றும் கணநாதா!
வருவாய் நினைவில் வந்தெனை ஆள்வாய்
வடிவேலனின் சோதரனே!
அருள்வாய் உனையே அனுதினம் பணிவேன்
அன்னை பராசக்தி அருள் மகனே!
திருமால் மருகா திருவடி சரணம்
தீன ரட்சகனே கண நாதா!

-          ஸ்ரீ விநாயக சப்தகம்

அருள் பெற்றிட

பிஞ்சுமதிச்  சடாமகுடப் பெருமானைப் பிரியாத
வஞ்சி இமவான் தவத்தின் வருபேடை மயிலுதவும்
அஞ்சிறை வண்டிரைத்து விழும் அருவி மதம் ஒழுகுகவுள்
குஞ்சரவெம் புகழ்முகத்துக் குரிசிலடி இணைதொழுவோம்.
- பிரமோத்தர காண்டம்.

உதவிகள் பெற

களியானைக் கன்றைக் கணபதியைச் செம்பொன்
ஒளியானைப் பாரோர்க்கு உதவும் அளியானைக்
கண்ணுவதுங் கைத்தலங்கள் கூப்புவதும் மற்றவன்றாள்
நண்ணுவதும் நல்லோர் கடன்.
- திருவிரட்டை மணிமாலை

மணப்பேறு  பெற

கைத்தல நிறைகனி அப்பமோடவல் பொரி
கப்பிய கரிமுகன் – அடிபேணி
கற்றிடுமடியவர் புத்தியிலுறைபவ
கற்பகமென வினை – கடிதேகும்
மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன்
மற்பொரு திரள் புய – மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு – பணிவேனே
முத்தமிழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட வெழுதிய – முதல்வோனே
முப்புரமெரி செய்த அச்சிவன் உறைரதம்
அச்சது பொடி செய்த – அதிதீரா
அத்துயரதுகொடு சுப்பிரமணிபடும்
அப்புன மதனிடை – இபமாகி
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கண மணமருள் – பெருமாளே!
-   திருப்புகழ்

எண்ணம் சிறக்க

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றினை
நந்திமகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேன் .
-   கந்தரந்தாதி

இடர்கள் நீங்க

பிடியதனுருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகணபதிவர அருளினார் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை இறையே.
-  சம்பந்தர்

எண்ணியன ஈடேற

ஓத வினையகலும் ஓங்குபுகழ் பெருகும்
காதல்பொருள் அனைத்தும் கைக்கூடும் – சீதம்
பனிக்கோட்டு மால்வரைமேல் பாரதப் போர்தீட்டும்
தனிக்கோட்டு வாரணத்தின் தாள்.
-  பெருந்தேவனார்

வினைகள் விலகிட

வெள்ளைக் கொம்பன் விநாயகனைத் தொழத்
துள்ளியோடும் தொடர்ந்த வினைகளே
அப்பம் முப்பழம் அமுது செய்தருளிய
தொப்பை அப்பனைத் தொழ வினை அறுமே.
- விநாயகர் துதி

தடைகள் நீங்க

அகரமென அறிவாகி உலகமெங்கும்
அமாந்தகர உகர மகரங்கள் தம்மால்
பகருமொரு முதலாகி வெறுமாகி
பல்வேறு திருமேனி தரித்துக்கொண்டு
புகரில்பொருள்நான் இணையும் இடர்தீர்ந்தெய்வப்
போற்று நறுக் கருணை புரிந்தல்லார்க்கு
நிகரின் மரக் கருணை புரிந்தாண்டு கொள்ளும்
நிருமலனைக் கணபதியை நினைந்து வாழ்வோம்.
-   கச்சியப்ப முனிவர்

வாழ்வு வளம்பெற

வானோடு நீரும் வளியும் தீயும்
வையகம் யாவும் உன் வடிவே
மானிட வாழ்வை மகிழ்வுறச் செய்வாய்
மங்கலப் பொருளே கணநாதா!
-   விநாயக சப்தகம்

அமைதி நிலவிட

மொழியின் மறைமுதலே முந்நயனத் தேறே
கழியவரும் பொருளே கண்ணே – செழிய
காலாலயனே, எங்கள் கணபதியே நின்னை
அலாலயனே சூழாதென் அன்பு
-  மும்மணிக்கோவை

தீவினைகள் அகல

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான் – விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் – தன்மையினால்
கண்ணிற் பணிமின் கனிந்து.
-  திருவிரட்டை மணிமாலை

இன்மையிலும் மறுமையிலும் சிறப்புற வாழ

வானுலகும் மண்ணுலகும் வாழ மறைவாழப்
பான்மைமிகு செய்யதமிழ்ப் பார்மிசை  விளங்க
ஞானமத ஐந்துகர மூன்றுவழி நால்வாய்
ஆணைமுகனைப் பரவி அஞ்சலி செய்கிர்பாம்!
-  சேக்கிழார் புராணம்

நல்வாக்கும் நல்மனமும் கிட்ட

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு.
- ஔவையார்

எமபயம் அகல

ஒற்றை மருப்பும் ஓரிரண்டு கைத்தலமும்
வெற்றி புனைந்த விழிமூன்றும் – பெற்றதொரு
தண்டைக்கால் வாரண த்தைத் தன்மனதில் எப்போழுதுங்
கொண்டக்கால் வாராது கூற்று.
-  திருவருட்பா

குருவருளும் திருவருளும் பெற

திருவுங் கல்வியுஞ் சீருஞ் சிறப்பும் உன்
திருவடிப் புகழ் பாடும் திறமும் நல்
உருவும் சீலமும் ஊக்கமும் தாழ்வுறா
உணர்வும் தந்தெனது உள்ளத் தமர்ந்தவா
குருவும் தெய்வமுமாகி அன்பாளர்தம்
குறை தவிர்க்கும் குணப்பெருங் குன்றமே
வெருவும் சிந்தை விலகக் கஜானனம்
விளங்கும் சித்தி விநாயக வள்ளலே.
-  திருவருட்பா

புகழும் மேன்மையும் பெற

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் – உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனைமுகத் தானைக்
காதலால் கூபுவர் கை.
- திருவிரட்டை மணிமாலை

சரணம் சரணம்

கலைநிறை கணபதி சரணம் சரணம்
கஜமுக குணபதி சரணம் சரணம்
தலைவநின் இணையடி சரணம் சரணம்
சரவண பவகுக சரணம் சரணம்
- விநாயகர் தோத்திரம்.

Leave a comment